குதம்பைச் சித்தர்

குதம்பைச் சித்தர் – பிறப்பு

பகவான் மாயோன் பிறந்த யாதவ குலத்தினரின் கிராமம் இது. கிராமத்தின் மத்தியில் ஆசிரமம் போல் அழகாக அமைந்திருந்தது அந்த வீடு. யாதவ குல தலைவர் கோபாலனின் வீட்டு முன் மக்கள் கூடியிருந்தனர்.

கோபாலனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள், எந்த நிமிடத்திலும் குழந்தை பிறக்கலாம் என்று சூழ்நிலை. நீண்ட வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் கண்ணன் காலடியில் கதறி கிடைத்த பாக்கியம் இது.

மாதவா, மாயவா நல்லபடியாகப் பிரசவம் முடிந்தால் களையம் களையமாக வெண்ணை சாற்றுகின்றேன்.

பால், இனிப்புகள் படைக்கிறேன். “அவல் விரும்பி அல்லவா நீ” அவல் உருண்டை செய்து தருகிறேன். அருள்செய் மாயோன் என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டார்.

வீட்டின் கதவு திறந்து பிரசவம் பார்த்த பெண்மணி ஓடி வந்தாள். ஐயா, ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது, தங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான். அவ்வளவுதான் கிராமமே விழாக்காலம் கொண்டு, இனிப்புகள் பரிமாறப்பட்டன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்த குழந்தை சிறந்த ஆன்மீகவாதியாகப் புகழ் பெறுவான் என்றார் ஜோதிடர்.

கோபாலன் தம்பதியினர் குழந்தை அழகாக இருந்தது. பார்ப்பவர் மனங்களைக் கொள்ளைகொண்டான், புன்னகையால் வசீகரித்தான். அவனைக் கீழே இருக்கவிடாமல் கிராமத்து மக்கள் மாற்றி மாற்றித் தூக்கி கொஞ்சினார்கள்.

கோபாலனின் மனைவி குழந்தைக்கு விதவிதமாக அலங்காரம் செய்து வேடிக்கை பார்த்தாள். ஏராளமான நகைகளை அணிவித்தாள், காதில் குதம்பை – கமல் போன்ற ஆபரணம் போட்டால், “அடா என் கண்ணே பெண் பிள்ளை போலவே இருக்கிறாயே”. எத்தனை அழகு நீ இங்கே வா “குதம்பை” என்று அடைத்தாள்.

இவள் இப்படி அழைத்ததை கண்டு அனைவருமே குதம்பை என்று அழைத்தனர். குதம்பை சிறுவனாக வளர்ந்தது முதலே காலையும், மாலையும் நாள் தவறாது கோவிலுக்குச் செல்ல ஆரம்பித்தான். அங்கு ஆண்டவனுக்கு நடக்கும் பூஜையில் ஆகம விதிகளை அனைத்தையும் நன்கு கவனித்தான்.

வீட்டுக்கு வந்தபிறகும் சுவாமி நினைப்பு போகவில்லை தன் மனதுக்குள்ளேயே கோவில் எழுப்பி, கடவுளை நிறுத்தி அவருக்கு அபிஷேகம், ஆராதனை நடத்திப் பார்த்தான்.

இதயம் பூரண திருப்தி அடைய அதையே நாளும் தொடர்ந்தான். குதம்பை இளைஞனான், குலவழக்கப்படி மாடுகள் மேத்தான், பால் கறந்தான், கிராமத்து வழியே வரும் சித்தர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் அழைத்து வந்து பால், பழம் தந்து பூஜித்தார். தன் வீட்டிலேயே தங்க வைத்துத் தல யாத்திரை செல்லும் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து அனுப்பினார்.

ஏழைகள் துன்பப்படுவதை கண்டால் மனம் இறங்கி விடுவார் குதம்பை. நல்லவிதமாக உதவிகள் செய்து அவர்களின் குறை தீர்க்காமல் நகர மாட்டார். இவரது இலக்கிய மனமும், நற்பண்புகளும், பக்தி உணர்வும் எல்லோராலும் பேசப்பட்டன.

குதம்பைச் சித்தர் – தவம் ஞானியின் ஆசிர்வாதம்

ஒரு நாள் விடியற்காலை நேரம், சூரிய பிரகாசத்துடன் தவ ஞானி ஒருவர் குதம்பை முன் வந்து நின்றார், குதம்பை பரவசமானார்.

அந்த யோகியின் கால்களில் விழுந்து வழங்கினார். குதம்பையை ஆசிர்வதித்த அந்தச் சித்தயோகி “புளி காயாக இருக்கும்போது ஓட்டோடு ஒட்டி இருக்கும் பழுத்தவுடன் ஓட்டுடன் பற்று இல்லாமல் தனித்திருக்கும்”. நீ தெளிய வேண்டிய வேலை வந்துவிட்டது என்றார்.

குதம்பையை பக்கத்தில் அழைத்து அமரவைத்து ஞான மார்க்கம் உபதேசித்தார். “ஊதுகிற வூத்தறிந்தா லவனே சித்தன்” என்கின்ற மூச்சின் நுட்பங்களை விவரித்தார்.

சித்த வித்தை எனப்படும் அஜபா காயத்ரி குறித்தும், உடலையே பொண்ணாக மாற்றக்கூடிய சக்தி குறித்தும் விளக்கினார்.

குதம்பை உடல் சிலிர்த்து போனார். குருதேவா, இந்த எளியவனை ஒரு பொருட்டாக மதித்து அருள் உபதேசம் நடத்திய தங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்? என்று கலங்கினார்.

குதம்பை ஏது ஒன்றும் காரணம் காரியம் இல்லாமல் நடப்பதில்லை, எத்தனை பிறவி எடுத்தாலும் நம் விதிப்பயன் தொடரத்தான் செய்யும்.

நீ போன பிறவியில் உத்தமனாகச் சிவ சிந்தனையுடன் கடும் தவம் செய்தாய். ஆனால் உன் தவம் நிறைவடைவதற்கு முன்பே உன் ஆயுள் முடிந்து விட்டது. அந்தத் தவத்தின் பயன் தான் இந்தப் பிறவியில் உன்னிடம் என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது.

என்னால் நீ பெற்ற ஞானத்தை, நீ மக்களிடம் கொண்டு சேர்ப்பதே உன் பணியாக இருக்கட்டும். வாழிர்! என்று விடைபெற்றுக் கொண்டார்.

குதம்பை குருநாதர் சொன்னதை கடைபிடித்து அனுபவம் பெற்று சிறந்த ஞானம் அடைந்தார், முழுமையான சித்தரானார். மக்களுக்கு நல்லுபதேசம் அளித்தார், நல்லவர்களைத் தேடித் தான்பெற்ற ஆற்றல்களை அவர்களுக்கு வழங்கினார். மக்களின் அறியாமையையும், மூடத்தனத்தையும் சாடினார். அப்படி அவர் பாடிய பாடல்கள் குதம்பைச் சித்தர் பாடல்கள் என்று அழைக்கப்பட்டன.

“வெண் காயமுண்டு, மிளகுண்டு, சுக்குண்டு,
உண்காயம் எதுக்கடி? குதம்பாய்
உண்காயம் எதுக்கடி?
கொல்லா விரதம், குளிர் பசி நீக்குதல்
நல்ல விரதமடி, குதம்பாய்
நல்ல விரதமடி”

என்று உயிர்பலியை தடுக்கும் இவரின் பாடல்கள் எல்லாமே குதம்பாய் என்று தன்னையே அழைத்துச் சொல்லிக் கொள்ளும் விதமாக அமைந்தவைதான். இவர் சாதிப்பிரிவினை பற்றியும் கடுமையாக எதிர்த்திருக்கிறார். குதம்பைச் சித்தர் சமாதி மயிலாடுதுறை உள்ளது.