கத்தி சேவல் சண்டை – முன்னுரை

கத்தி சேவல் சண்டை

ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

சேவலின் வலது காலில் இதற்காகச் சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜாக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றியபின் (ஆக்ரோஷம் கொள்ள) சேவல்களை மோதவிடுகின்றனர்.

இதில் ஆவேசம் அடையும் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. மோதலில் காயமடையும் சேவல்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் அளித்து, தண்ணீர் தெளிப்பான் (ஸ்பிரேயர்) மூலம் அல்லது ஜாக்கிகள் வாயில் தண்ணீரை வைத்துச் சேவல் முகத்தில் ஸ்ரேபியர் போலத் தண்ணீரை ஊதியும் அதன் முகத்தில் வாயால் ஊதியும் மீண்டும் மோதவிடுகின்றனர்.

போட்டியில் வெற்றிபெறும் சேவல்கள் மீண்டும், மீண்டும் மோதவிடப்படுகின்றன. தோல்வியடைந்த சேவல்களில் சில பலத்த காயமுற்று இறந்து விடுவதும் உண்டு. கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன.

கத்தி சேவல் சண்டை – சேவல் வகைகள்

கத்தி சேவல்களுக்கு வால் நீளமாக இருக்கும். இவற்றில் பச்சை மற்றும் கருங்கால் சேவல்கள் சிறந்த வகைகளாகக் கருதப்படுகின்றது.

நிறத்தைப் பொருத்தமட்டில் பலவகைகள் உண்டு அவை.கோழி வள்ளுவர், காக வள்ளுவர், கீரி வள்ளுவர், பூத வள்ளுவர், பொன்ற வள்ளுவர், பொன்றக் காகம், செங்காகம், கருங்காகம், வெண்காகம், செங்கீரி, காகக் கீரி, பொன்றக் கீரி, வள்ளுவர்க் கீரி, பூதிக் கீரி, காகப் பூதி, பொன்ற பூதி, செம்பூதி, பொன்ற வெள்ளை, புள்ளி வெள்ளை, காகக் கருப்பு, பேய்க்கருப்பு, சேவப்பேடு, கோழிப்பேடு, கரும்பேடு, வெண்பேடு, பொன்றப்பேடு, பூதப்பேடு, காகப்பேடு, சித்திரப்புள்ளி, நூலாவள்ளுவர், ஆந்தை, மயில் ஆகும்.

கழுத்து மற்றும் இறகுகளில், நீண்ட வண்ணக் கீற்றுகள் கொண்டவை வள்ளுவர்ச் சேவல் என அழைக்கப்படுகின்றன. கோழியின் தோற்றத்தில் இருக்கும் சேவல்கள் பேடுகள் எனப்படுகின்றன. கருமையும் சிவப்பும் கலந்த இறகுகளைக் கொண்டவை காகச் சேவல்கள். கட்டுக் கட்டாக வண்ணத் திட்டுகளை உடையன கீரிச் சேவல்கள்.

வெண்ணிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, வெள்ளைச் சேவல்கள். கருப்பு நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை பேய்க்கருப்பு என அழைக்கப்படுகின்றன. பழுப்பு நிறத்தை உடையவை பொன்நிறம் என்பனவாகும். சாம்பல் நிறத்தைப் பிரதானமாகக் கொண்டவை, பூதிகள் என அழைக்கப்படுகின்றன.

கொண்டை அல்லது தலையில் இருக்கும் பூவைப் பொறுத்து, குருவிப்பூச் சேவல், மத்திப்பூச் சேவல், தவக்களைப் பூச் சேவல், கத்திப்பூச் சேவல், ஊசிப்பூச் சேவல் எனப் பல இரகம்.
அதே போலக் கால்களைப் பொறுத்தும், பல வகைகளாகச் சேவல்களை இனம் பிரிக்கின்றனர். வெள்ளைக்கால், பேய்க்கருப்பு, பொன்றம், பூதக்கால், பசுபுக்கால், காரவெள்ளை, முகைச்சக்கால், கருங்கால் எனப்பட்டியல் இடபடுகிறது.

கத்தி சேவல் சண்டை -போட்டி நடக்கும் முறை

கத்தி சேவல் சண்டை - போட்டி நடக்கும் முறை

போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரில் யாராவது ஒருவர் செவ்வக வடிவ களத்தின் மையத்தில் தமது சேவலைக் கொண்டு நிறுத்தி, பின் கையில் எடுத்துக்கொள்வர்.

இதற்கு நடவு போடுதல் என்று பெயர். நடவு போடுதல் செய்தபின்பு எதிரணியினர் நடவு போட்ட சேவலுக்கு இணையான, அதே நிற, இன, அளவுள்ள சேவலைச் சண்டைக்கு விடுவர். இந்நிலையில் இரு சேவலுக்கும் காலில் கத்தி வைத்துக் கட்டப்படுகிறது.

சேவல் விடுபவர்கள் களத்தின் உள்ளே சென்று இரு சேவலுக்கும் இடையில் சுமார் 10 அடி இடைவெளியில் நிறுத்துவர். அப்பொழுது இரு சேவலும் ஒன்றையொன்று பார்க்கும் படி இருக்கும். இதற்கு “முகைய விடுதல்” என்று பெயர். அது தான் உன் எதிரி என்று அடையாளம் காட்டுவது போல் இது இருக்கும்.

இந்நிலையில் இரு சேவல்களும் ஒன்றையொன்று நோக்கி ஓடி வந்தும், பறந்தும் காலில் கட்டியுள்ள கத்தியால் மற்றதன் உடல் பகுதியில் குத்தியும் பல காயங்களை ஏற்படுத்துகின்றன. அப்போது தொடர்ந்து சண்டையிடாமல் சேவல் விடுவோர் தம்தம் சேவல்களைக் கையில் பிடித்துக்கொள்வர்.

அதற்குத் தண்ணீர் தந்து களைப்பை நீக்குவர். ஈரத்துணியால் காயங்களைத் துடைத்து மருந்திடுவர். மீண்டும் சேவலின் முதுகில் தட்டிக் கொடுத்துக் களத்தில் விடுவர்.

கத்திகால் சேவல்கள் பெரும்பாலும் எதிர் சேவலின் நெஞ்சுபகுதியை தாக்கும். சில நேரங்களில் எதிர்சேவலின் குடல் சரிந்து இறக்கும் அளவுக்குத் தாக்குதல் இருக்கும். முதலில் வேகமாக நொடிபொழுதில் எதிர் சேவலின் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சும் சேவலே பெரும்பாலும் ஜெயிகின்றது.

போரிட்டுக் கொள்ளும் இரு சேவல்களின் போர்ச்செயல்முடிவே இவ்விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தைவிட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது.

தோற்ற சேவல் உயிருடனோ, இறந்த நிலையிலோ வெற்றியடைந்த சேவலின் உரிமையாளருக்குக் கிடைக்கிறது. இதற்கு “கோச்சை” என்று பெயர்.

சேவல் சண்டை போட்டியில் சேவல் காலில் கட்டிய கத்தி குத்தி பலர் பலியாவதும் உண்டு. ஆதலால் மிகவும் பாதுகாப்புடன் சண்டை விடுவது அவசியம்.

கத்தி சேவல் சண்டை – இடம் மற்றும் காலம்

திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கத்திகட்டு வெப்போர் இரெண்டுமே நடை பெறுகின்றது.

திருவிழா காலங்களில் அதிகமாகச் சண்டைகள் நடைபெறுவதுண்டு. பெண்கள் பொதுவாகப் பங்கு பெறுவதில்லை இருப்பினும் விதிவிலக்குகளும் உண்டு.

பல அரிய இன சேவல்கள் இந்தச் சேவல் போராளிகள்மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இச்சேவல்களை வளர்பதே ஒரு பெரிய கவ்ரவமாகக் கருதப்படுகின்றது.

மற்ற தகவல்கள்

இன்று உலக மக்களுக்குப் புரத பற்றாக்குறையினை சரி செய்யும் “ப்ரைலெர் கோழிகள்” இந்த “சண்டை கோழி” இனத்தையும் “பிற கோழி” இனத்தையும் கலவை செய்ததால் கிடைத்தன. உலகமே இச்சேவல்களை ஒரு அறிய பொக்கிசமாகப் பார்கின்றனர்.

இதன் மூலமாகப் பல பயனுள்ள கோழி வகைகள்(ரோட் ஐலண்ட், கார்னிஷ், ப்ரைலெர்) ஆராய்ச்சி முலமாக நமக்குக் கிடைத்துள்ளன.

“சேவல் சண்டை உலகம் முழுக்க நடக்கிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இன்றும் சேவல் சண்டையை முழு வாழ்நாள் தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்பொழுதும் சேவல் சண்டைகள் நடக்கிறது. கிராமங்களில் பொழுது போக்குக்காக இருக்கிற சேவல் சண்டை, நகரங்களில் சூதாக மாறிவிடுகிறது.

நோபல் பரிசு பெற்ற காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் சேவல் சண்டையை மையமாக வைத்து நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார், அதில் சேவல் சண்டையில் ஜெயித்தவன் மட்டுமே ஆண்மை உள்ளவன் என்றும், தோற்றவன் ஆண்மையற்றவன் என்றும் கருதப்படுவார்கள் என்று, மக்கள் நினைப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்’ என்கிறார் சேவல் சண்டைகள்குறித்து ஆய்வு செய்து வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

சேவல் சண்டை தமிழ்நாட்டின் தனி அடையாளம். இந்தக் கோழிகள் தமிழனின் வீரத்தையும், பாரம்பரியத்தை, பெருமையையும், வரலாற்றையும் பறைசாற்றுகின்றன. சேவல் சண்டையைப் பற்றியா குறிப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது.

தமிழ்நாடு சேவல் சண்டை 2000 ஆண்டுகள் பழமையானது. மனு நீதி சாஸ்திரம், காட்டு சேவல் சாஸ்திரம், மற்றும் பிற சங்க வயது இலக்கியம், போன்ற பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பண்டைய காலத்தில் மறவர்களால் ஓய்வுநேரத்தில் விளையாடப்பட்டது எனக் குறிப்பிடப்படுகிறது.

இது “64 கலைகளுள்” ஒன்று என ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு அறிய விஷயமான சண்டை சேவல்களையும், இக்கலையையும் போற்றி பாதுகாப்பது ஒவ்வொரு தமிழ்மகனின் கடமை.