நாட்டு கோழி வளர்ப்பு

இந்திய மக்கள் தொகையில் பெரும்பாளானோர் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். எனவே,கிராமப்புற வளர்ச்சியே இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

இவர்களின் முக்கிய தொழில் உழவுத் தொழில், கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புப்பாகும்.

கோழி வளர்ப்பு என்பது நாட்டு கோழி, வீரிய இரக முட்டை மற்றும் இறைச்சி கோழி, ஜப்பானிய கடை,வான் கோழி, வாத்து, கினிக்கோழி ஈமு ஆகியவற்றை உள்ளடக்கியதுதாகும்.

 

நாட்டு-கோழி-வளர்ப்பு-

தனிமனிதன் ஆண்டுக்கு 180 முட்டைகளும் 15 கிலோ இறைச்சி உட்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் தனிமனிதன் 1 ஆண்டு 47 முட்டைகளும்,1.7 கிலோ இறைச்சி கிடைக்கின்றது.

மாறிவரும் உணவு பழக்கம், பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் தரமான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு முதலிய காரணங்களால் விலங்கின்ப் புரதத் தேவை அதிகரித்து வருகிறது.

விலங்கினப் புரதத் தேவையை பூர்த்தி செய்ய பால், முட்டை, இறைச்சி வழங்கும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

வணிக நோக்கில், வீரிய இரகக் கோழி வளர்ப்புக்கு பெரும் முதலீடு தேவைப்படுகிறது.

குறைந்த அளவு முதலீடு, இடவசதி, எளிய வீட்டு அமைப்பு, சுவைமிக்க இறைச்சி மற்றும் முட்டை, அதிக விற்பனை விலை மற்றும் எளியப் பராமரிப்பு போன்ற காரணங்களினால் சிறு, குறு விவசாயிகள், நிலம் இல்லாதவர், மகளிரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான நாட்டுக்கோழிகள் மூலம் கிடைக்கும் குஞ்சுகள் 4 மாதம் வரை இறைச்சிக்கென வளர்த்தாள் குடும்பத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நாட்டுக்கோழிகளில் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், புரதச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய நாட்டு கோழி வளர்ப்பு அவசியமாகும்.

வீரிய ரக கோழிகளின் எண்ணிக்கையும், அதன் உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ள இச்சூழலில் நாட்டுக்கோழி வளர்ப்பின் மீதுள்ள ஆர்வம் இன்றளவும் குறையாமல் உள்ளது.

உணவு விடுதிகள் மற்றும் துரித உணவு கூடங்களை நாட்டு கோழி இறைச்சிக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தால் நாட்டு கோழி வளர்ப்பு தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

நாட்டு கோழி வளர்ப்பு – நன்மைகள்

 

நாட்டு-கோழி-வளர்ப்பு- நன்மைகள்

நாட்டு கோழி வளர்க்கக் குறைந்த மூலதனம் போதுமானது.

குறைந்த அளவு இடவசதி போதுமானது.

நாட்டு கோழி அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டது.

மிக மிகக் குறைந்த தொழில்நுட்பத்தில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாகும்.

குடும்பத்தில் ஏற்படும் அவசரத் தேவைகளுக்காக நாட்டு கோழிகளை விற்பது கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, நாட்டுக்கோழியை ஒரு செல்வம் கொழிக்கும் அட்சயப் பாத்திரம் என்று சொல்ல வேண்டும்.

நாட்டுக்கோழிகளின் மூலம் கிடைக்கப் பெறும் முட்டை மற்றும் இறைச்சி குடும்ப உறுப்பினர்களின் விலங்கினப் புரதச் சத்துத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாகும்.

கிராமங்களில் வேண்டுதலுக்காகவும் ( நேர்த்திக்கடன் ), விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக வழங்கவும் நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

புல், பூண்டு, எறும்பு, கரையான் முதலியவற்றை உட்கொண்டு இருக்கும் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

நாட்டு கோழி முட்டையில் உயிர்ச்சத்து “சி” யை தவிர அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் நிறமிகளும், இதயத்திற்கு இதமளிக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. நாட்டுக்கோழி முட்டையில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு வீரிய ரக முட்டைக் கோழிகளில் உள்ள கொலஸ்ட்ராலை விடக் குறைவாக உள்ளது.

நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, மதிப்பூட்டிய இறைச்சி மற்றும் முட்டை ஆகியவை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகின்றன.

சிறு விவசாயிகள், நிலமற்றோர், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பள்ளிப்படிப்பைப் தொடர முடியாதவர்கள், நாட்டுக்கோழியைச் சிறிய அளவில் வளர்த்து அதிக லாபம் அடையலாம்.

தமிழகத்தில் நாட்டு கோழி வளர்ப்பு

தமிழகத்தின் மொத்த முட்டை உற்பத்தியில் கோழிகளின் முட்டை உற்பத்தி 4.6 விழுக்காடாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாட்டுக்கோழி முட்டை உற்பத்தியில் விருதுநகர், சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.

புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் நாட்டு கோழி இறைச்சி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

ஒருங்கிணைந்த நாட்டு கோழி வளர்ப்பு

 

நாட்டு-கோழி-வளர்ப்பு- ஒருங்கிணைந்த

ஒருங்கிணைந்து இறைச்சிக் கோழி வளர்ப்பு போன்றே, நாட்டுக்கோழிகளை வளர்க்கப் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள், தீவனம், மருந்து, மற்றும் தொழில்நுட்ப உதவிகளைத் தமிழகத்தில் உள்ள தனியார் கோழிப் பண்ணை நிறுவனங்கள் அளிக்கின்றன.

பண்ணை ஆரம்பிக்கத் தேவையான இடுபொருட்கள் தனியார் நிறுவனங்களே வழங்குவதால் பண்ணையாளர்கள் குறைந்த மூலதனம் கொண்டே பண்ணையை ஆரம்பிக்கலாம்.

பண்ணையாளர் கொட்டகை, ஆழ்கூளப் பொருட்கள், மின்சாரம் மற்றும் வேலையாட்களைக் கொண்டு சிறந்த தீவனம் மற்றும் திறன் மற்றும் குறைந்து இறப்பு சதவீதத்துடன் வளர்க்க வேண்டும்.

நாட்டு கோழி வளர்ப்பு மேம்படுத்த வழிமுறைகள்

பண்ணையாளர்களுக்கு நாட்டுக்கோழிகளை அறிவியல் தொழில்நுட்பம் முறைப்படி வளர்க்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.

நாட்டுக்கோழிகளில் ஏற்படும் பொருளாதாரம் இழப்பைப் போக்க உயர்பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்க வேண்டும்.

சிறிய பணியாளர்களுக்கும் தடுப்பூசியைப் பயன்படுத்தும் நோக்கில் குறைந்த விலையில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

இடுபொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நாட்டுக்கோழிகளுக்குத் தரமான தீவனம் அளிக்க அறிவுறுத்த வேண்டும்.

விற்பனை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் போக்க வீரிய ரக இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு உள்ளது போல் நாட்டுக்கோழிகளுக்கு என்று தனித்துவம் பெற்ற “நாட்டு கோழி ஒருங்கிணைப்புக் குழு” ஒன்றை உருவாக்க வேண்டும்.

அனைத்து வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களிலும் நாட்டுக்கோழி பண்ணை தொடங்க நிதி உதவி மற்றும் காப்பீடு வசதிகளை அளிக்க முன்வரவேண்டும்.

தொன்று தொட்டு வளர்ந்து வரும் நாட்டுக்கோழிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்யும் மற்றும் கிராம மக்களின் வருமானத்தை உயர்த்தும் நமது தோழனான நாட்டுக்கோழியை வளர்த்து வாழ்வில் வளம் பெறலாம் என்பது திண்ணமான உண்மையே.

Credits:

மருத்துவர் மூ சுதா
முனைவர் ம பழனிசாமி
மருத்துவர் ச மனோகரன்
முனைவர் த செந்தில் குமார்

Related Links:

Summary